|
| ஈழத் தமிழர்களை பாதுகாக்க கோரி தமிழகம் முழுவதும் பேரணி : வைகோ |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009 ( 17:22 IST ) | |
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 21 ம் தேதி நடைபெறும் எழுச்சி பேரணியில் தமிழ் உணர்வாளர்கள் அணிதிரண்டு வர வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
உலக சரித்திரத்தில் கடந்த 100 ஆண்டுகளில் எங்குமே நடைபெற்றிராத கொடூரமான இனப்படுகொலையால் ஈழத் தமிழினம் பேரழிவுக்கு ஆளாகிவிட்டது.கடந்த மே 12 ம் தேதி மாலையில் இருந்து நேற்று 18 ம் தேதி நண்பகல் வரையில் 42,000 தமிழர்கள் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உள்பட சிங்கள ராணுவத் தாக்குதலால் விமான குண்டுவீச்சால் உலக நாடுகள் தடை செய்துள்ள குண்டுவீச்சால் கோரமாக கொல்லப்பட்டு உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஆய்வாளர்கள் இந்த உண்மையைக் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக இறந்தவர்களின் உடல்களை எடுத்து அந்தச் சாம்பலையும் கடலில் கரைக்கும் மாபாதகச் செயலை சிங்கள அரசு நடத்திக் கொண்டு இருக்கிறது.
பதுங்கு குழிகளில் படுகாயமுற்று மரண ஓலம் இட்டவர்களையும் சுட்டுக் கொன்று எரித்து விட்டனர்.மூன்றரை இலட்சம் தமிழ் மக்கள் முல்லைத்தீவில் சிங்கள ராணுவத்தின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர் என்று ஜனவரி தொடக்கத்தில் இருந்து நான் கூறியபோது வெறும் 70,000 தமிழர்கள் அங்கு இருப்பதாக சிங்கள அரசும், இந்தக் கூட்டுச் சதியின் பங்காளியாக இந்திய அரசும் கூறியதை நினைவூட்டுகிறேன்.
இப்போது 1,20,000 தமிழர்கள் அண்மையில் பாதுகாப்பு வளையப்பகுதிக்கு வந்துவிட்டதாக சிங்கள ராணுவம் கூறியதில் இருந்தே எத்தகைய கொடூரமான இனக்கொலையை அவர்கள் நடத்தி உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகி விட்டது.இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலைக்கு ஆளாகும் பேராபத்து அவர்கள் தலைக்குமேல் கொலைவாளாக தொங்கிக் கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் உலகமகா வீரரான பிரபாகரனை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அவர் தப்பி ஓட முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக சிங்கள அரசு கூறும் நச்சுப் பிரசாரத்தை இந்தியாவில் குறிப்பாக டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தொலைக்காட்சி ஊடகங்களும், சில ஏடுகளும் ராஜபக்சே அரசின் கைக்கூலிகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனமெல்லாம் நொறுங்கி மரண இருளாக துயர்மேவியுள்ள இந்நிலையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி அந்த இருளுக்கு மத்தியில் வெளிச்சமாகக் தென்பட்டாலும், கொடூரமாகக் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காவும், போராளிகளுக்காகவும் வீரவணக்கம் செலுத்த வேண்டியது நமது கடமையாகும்.
ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழினம் அழிக்கப்பட்டுவிடாமல் எஞ்சி உள்ள தமிழர்களையாவது காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு துன்பம் சூழ்ந்த வேளையில் குரல் கொடுத்த அமெரிக்க அரசையும், பிரிட்டன் அரசையும் வற்புறுத்தவும் இதுவரை கடமையாற்றாத ஐ.நா. மன்றத்தை இனிமேலாவது தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தவும் தாய்த்தமிழகத்து மக்கள் நம்சொந்தச் சகோதரர்களை பாதுகாக்க சூளுரைக்கச் செய்யவும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாளை மறுதினம் 21 ம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் தலைநகர் சென்னையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எழுச்சிப் பேரணியை நடத்த இருக்கிறோம்.
இந்த பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் தோழர்களும், கழகக் கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும் அதற்குரிய பணிகளை நிர்வாகிகள் மேற்கொள்ளவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|