யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சிபொம : திமுக-பாமக மோதல்
சென்னை(ஏஜென்சி), வியாழக்கிழமை, 1 மே 2008   ( 16:15 IST )
சென்னையில் இரண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் எந்த மறைமுக நடவடிக்கையும் கிடையாது என்று கூறியுள்ள முதலமைச்சர் கருணாநிதி, அரசின் நல்ல முயற்சிகளை திசை திருப்பி தமிழகத்தின்தொழில் வளர்ச்சிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முட்டுக்கட்டை போடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.


சென்னை தரமணியில் இரண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் வழங்கியதில் அரசு அவசரம் காட்டியதாகவும்,
ரியல் எஸ்டேட்டுக்கு அரசு துணை போவதாகவும், நில ஒதுக்கீடு குறித்து சட்டசபையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள கருணாநிதி ராமதாஸை கடுமையாக சாடியுள்ளார்.அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :

இந்த அரசைப் பொறுத்தவரையில் எதிலுமே ஒளிவுமறைவற்ற இணக்கமான அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதே தவிர எதிலும் மறைமுக நடவடிக்கை கிடையாது என்பதை தொழில் தொடங்க முன் வந்திருப்பவர்களிடமே டாக்டர் ராமதாஸ் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ள இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் ஏதோ 300 ஏக்கர், 400 ஏக்கர் பரப்பளவில் அமைவதல்ல.சென்னையில் தகவல் தொழில் நுட்ப மையமாக தற்போது ராஜீவ் காந்தி சாலை தரமணியில் அமைந்து வருகின்றது.

அந்தப் பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ, கூட்டுத் துறையிலே டாட்டா ரியாலிட்டி மற்றும் இன்ஃப்ராட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தோடு இணைந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உலகத் தரம் வாய்ந்த தகவல் தொழில் நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மற்றொரு நிறுவனமான டிஎல்எப் ஏறத்தாழ 27 ஏக்கர் நிலப்பரப்பில்தான் தகவல் தொழில் நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

அதுவும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறு வனமான டிட்கோவுடன் கூட்டுத் துறையிலே செயல்பட உள்ளது. அது மாத்திரமல்ல. இந்த இரண்டு இடங்களுமே விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலமல்ல.

சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நட்சத்திர ஓட்டல்களும், சொகுசு மாளிகை குடியிருப்புகளும் வர இருக்கின்றனவா என்று டாக்டர் கேட்கிறார். இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வரவுள்ளன.

அந்த நிறுவனங்களிலே பணியாற்றக் கூடியவர்களுக்கும், வெளியிலிருந்து வரக்கூடியவர்களுக்கும் பயன்பட வேண்டுமென்பதற்காகத்தான் அந்த 40 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஒரு சில லட்சம் சதுர அடி பரப்பளவில் மாநாட்டுமையமும், தங்கும் விடுதியும், அடுக்குமாடி குடியிருப்புகளும் அமையும்.

அந்த ஒரு சில லட்சம் சதுர அடி போக மற்ற இடங்களில் தொழிற்சாலைகள்தான் அமையும். வெறும் ஓட்டலும், குடியிருப்புகளும் மட்டும் அங்கே ரியல் எஸ்டேட் போல கட்டப்படப் போவதில்லை. இது போலவே மற்றொரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் முதலீடு 1500 கோடி ரூபாய். 40 லட்சம் சதுர அடி பரப்பளவில் அந்த மண்டலம் அமையும் போது பல மென் பொருள் நிறுவனங்கள் அங்கே உருவாகும்.

அறிக்கையைத் தொடங்கும்போதே சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே ஏற்பளிக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அவசரமாகக் கையெழுத்திடப்பட்டு வருகின்றன என்றும் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.

டாக்டர் ராமதாசைப் போன்ற விஷயம் புரிந்தவர்கள், 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வர வேண்டுமென்று எண்ணத்தோடு செயல்பட்டு கொண்டிருப்பவர்கள் இதை போன்றவற்றில் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு அல்லது கேட்டுத் தெரிந்து கொண்டு அறிக்கைகளை விடுவது நல்லது.

இந்த அரசு டெண்டர் எதுவும் இல்லாமல், யாருக்கும் தனிப்பட்டவர்களுக்கு இந்தப் பொறுப்பினை வழங்கிடவில்லை. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் கூட முழு பொறுப்பும் வழங்கவில்லை. அரசுக்குச் சொந்தமான டிட்கோ நிறுவனமும் இணைந்து கூட்டுத் துறையிலேதான் இயங்கப் போகின்றது.

திரைப்பட நகராக இருந்த இடம்தான் இப்போது சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் ஓட்டலுக்கும், குடியிருப்புகள் கட்டவும் ஒதுக்கப்பட்டிருப்பதாக டாக் டர் ராமதாஸ் அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். இதுவும் முற்றிலும் தவறான செய்தி.

திரைப்பட நகராக இருந்த இடமும், தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நிறுவனமும் உள்ள 16 ஏக்கர் நிலம் அப்படியேதான் உள்ளது. அந்த இடத்தை சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக ஒதுக்கவில்லை. சாமானியர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவி செய்யாமல், டாட்டாக்களுக்கும், கிஷோர்களுக்கும், குஹாக்களுக்கும் உதவி செய்வதாக டாக்டர் அறிக்கையில் கூறுகிறார்.

தமிழகத்திலே உள்ள சாமானியர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் உண்மையாக உதவி செய்யத்தான் வெளிநாட்டு, வெளி மாநில முதலீடுகளைக் கொண்டு வந்து தமிழகத்திலே தொழில் வளத்தை ஏற்படுத்திட இந்த அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறதே தவிர, டாட்டாக்களிடமும், கிஷோர்களிடமும் தனிப்பட்ட முறையிலே எந்தவித மான ஆதாயமும் பெற வேண்டுமென்ற நோக்கத் திற்காக அல்ல என்பதை டாக்டர் புரிந்திருப்பார் என்றே நம்புகிறேன்.

சென்னை மாநகராட்சி பகுதிக்குள் சிறப்புப் பொரு ளாதார மண்டலமா என்று வியப்பு தெரிவித்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். சென்னை யிலே மட்டுமல்ல, அண் டையிலே உள்ள பெங்களூர், ஐதராபாத், மும்பாய், திருவனந்தபுரம், கொச்சி போன்ற மாநகரங்களிலே கூட இத்தகைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த மாநகரங்களில் இத்தகைய தொழிற்சாலை களையெல்லாம் நடத்துபவர்கள் எல்லாம் வெளி மாநிலங்களையும், வெளி நாட்டையும் சேர்ந்தவர்கள்தான். வெளியிலிருந்து யாருமே இங்கே வரக் கூடாது, தமிழகத்திற்குள் இருப்பவர்கள்தான் தொழிற்சாலையைத் தொடங்கி அவர்களை மட் டும் ஊக்குவிக்க வேண்டு மென்றால், இவ்வளவு ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யக் கூடிய அளவிற்கு அத்தனை தொழிலதிபர்கள் தமிழகத்திலே கிடையாது.

தமிழகம் செழிக்க, தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற வெளி நாட்டினரும், வெளி மாநிலத்தினரும் முன்வரும் போது அவர் களையெல்லாம் இங்கே விடக் கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கூறுகிறாரா?

அரசியல் கட்சிகள், வெகு ஜன அமைப்புகள் சமூகக் குழுக்கள், கல்வியாளர்கள், வல்லுநர்கள் என்று பல தரப்பினரும் அரசின் கொள்கையை சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். டாக்டர் ராமதாஸ் அவர் களுக்குத் தான் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, மற்றவர்கள் எல்லாம் அரசின் இந்த முயற்சிகளை வரவேற்கவே செய்கிறார்கள்.

மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழிற் சாலைகளை அமைக்க வேண்டுமென்ற அரசின் தொழிற் கொள்கைக்கு விரோதமாக செயல் படுவதாகவும் ராமதாஸ் குற்றஞ்சாட்டியிருக்கிறார். சென்னையைச் சுற்றி மாத்திரமல்ல, கோவையிலும், மதுரை யிலும், திருச்சி யிலும், சேலத்திலும், திருநெல்வேலி யிலும், ஓசூரிலும், வேலூரிலும் மென் பொருள் பூங்காக் களையும் பெரிய தொழிற் சாலைகளையும் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கே அடிக்கல் நாட்டு விழாக்களும் நடைபெற்று, அந்தச் செய்திகள் ஏடுகளில் வந்ததை ராமதாஸ் பார்க்காமல் இருந்திருக்க முடியாது.

இந்த நேரத்தில் வேறொன்றை நினைவூட்டுவது கூட பொருத்தமாக இருக்குமென எண்ணு கிறேன். கோவையில் பொது நோக்கத்தை நிறை வேற்றுவதற்காக நிலங்கள் எடுக்கப்பட்டு எத்தனையோ ஆண்டுகளாகிறது.

ஆனால் தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நிலத்தின் உரிமையாளர்கள் என்ற போர்வையில் சிலர், ஒரு குறிப்பிட்ட கட்சித் தலைவரை அணுகி, அந்த நிலங்களையெல்லாம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து போராடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதைப் பற்றி அரசுக்கு தகவல் வந்துள்ளது.

எனவே இப்படி யெல்லாம் உருவாகும் இந்த அரசின் முயற்சிகளுக்கு எப்படியெல்லாம் தடைக் கற்கள் போடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டு சிலர் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அரசின் நல்ல முயற்சிகளுக்கு துணை நிற்க வேண்டிய டாக்டர் ராமதாஸ் இப்படிப்பட்ட கேள்விகளை அறிக்கைகளாக்கி திசை திருப்புவது என்பது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை விசை ஒடிந்திடும் நிலைமைக்குத் தான் உள்ளாக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குஷ்பு மீதான 26 வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
தமிழகத்திற்குள் ஊடுருவ கருணா பிரிவினர் முயற்சி
இலங்கை மீனவர்கள் 15 பேர் கைது
தொழிலாளர்களுக்கு கருணா‌நி‌தி மே ‌தின வா‌ழ்‌த்து
நளினி மனு : மத்திய , மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
'நர்கீஸ்' புயலால் அதிகரித்த மின் உற்பத்தி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace