|
| இலங்கை தமிழரை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை: ஐ.நா. |
| நியூயார்க் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 14 மே 2009 ( 17:18 IST ) | |
இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெறும் போரில் மக்கள் கொல்லப்படுவது பற்றி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள ஐ.நா. சபையின் பாதுகாப்புப் பேரவை, மக்களைப் பாதுகாக்க சிறிலங்க ராணுவமும், விடுதலைப் புலிகளும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் வடக்குப் பகுதியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சனைகள் தொடர்பாக, குறிப்பாக அண்மைக்காலத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் ஆழ்ந்த கவலை அடைந்திருக்கின்றனர் என கூட்டத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் பேரவை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பல ஆண்டு காலமாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருவதற்காக அதனைப் பாதுகாப்புச் பேரவையின் உறுப்பினர்கள் வன்மையாகக் கண்டிப்பதாக ஐ.நா. பாதுகாப்புப் பேரவை தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு அவர்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் சிக்கியுள்ள மக்களை வெளியே வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மீது சிறிலங்கப் படைகள் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களை நடத்துவதையும் கண்டித்துள்ள ஐ.நா. பாதுகாப்புப் பேரவை இதுதொடர்பாக தன்னுடைய ஆழ்ந்த கவலையைத் தெரியப்படுத்தியிருக்கிறது.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கி-மூன் இந்தப் பிரச்சனையைக் தனிப்பட்ட முறையில் கையாள வேண்டும் என்று கூறியுள்ளதற்கும் இந்த அறிக்கையில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்புச் பேரவையால் முன்னெடுக்கப்பட்ட ஒரு முக்கிய தீர்மானம் இது எனக் குறிப்பிடும் இங்கிலாந்துத் தூதர் ஜோன் வாவர், “இலங்கையில் மோசமடைந்து வரும் மனிதாபிமானப் பிரச்சனைகள் தொடர்பில் நாம் முதல் தடவையாக அதிகாரபூர்வமான அறிக்கை ஒன்றை எழுத்து மூலமாக வெளியிட்டிருக்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ஆதரவுடன் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகளால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் பாதுகாப்புச் சபையிலுள்ள 15 நாடுகளும் இதற்கான தமது ஒப்புதலை ஏகமனதாக வெளியிட்டதாகவும் ஐ.நா. வட்டாரங்களை ஆதாரங்காட்டி செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் போர் தொடங்கி பல மாதங்கள் சென்றுவிட்ட நிலையில் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் நேற்றுதான் இதுதொடர்பாக அதிகாரபூர்வ ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
ஐ.நா. பாதுகாப்புப் பேரவை, வன்னி நிலை தொடர்பாக அதிகாரபூர்வமற்ற பல கூட்டங்களை ஏற்கனவே நடத்தியிருந்த போதிலும், கடந்த வார இறுதியில் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அதிகாரபூர்வமான விவாதம் நடத்துவதற்கு ரஷ்யா, சீனா, வியட்நாம், லிபியா ஆகியன நாடுகள் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து இக்கூட்டம் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டரீதியாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல எனத் தெரிவிக்கும் ராஜதந்திரிகள், இருந்த போதிலும் சிறிலங்க அரசின் மீதான போர் நிறுத்த அழுத்தங்களை மேலும் அதிகரிப்பதற்கு இது உதவுவதாக அமையும் எனத் தெரிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|