|
| பிரச்னையை தீர்க்காவிட்டால் பேரழிவை தவிர்க்க முடியாது: ஒபாமா |
| வாஷிங்டன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 14 மே 2009 ( 15:15 IST ) | |
இலங்கையில் மனிதாபிமானப் பிரச்சனை உருவாவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, போர்ப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தேவையான உதவிகள் சென்றடைவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் பராக் ஒபாமா, இலங்கையில் ஒரு மனிதாபிமானப் பிரச்சனை உருவாகியிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். போர்ப் பகுதியில் இருந்து அண்மைக் காலத்தில் கிடைத்த செய்திகள் மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது.
போர்ப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு எந்தவிதமான வசதிகளும் இல்லாமல், உணவு, குடிநீர், மருந்து மற்றும் வாழ்விட வசதிகள் எதுவும் இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டுள்ளார்கள். இது கடும் அவல நிலையைத் தோற்றுவித்திருப்பதுடன், மக்கள் இதனால் உயிரழிக்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.
இதுதொடர்பாக உடனடியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இந்த மனிதாபிமானப் பிரச்சனை ஒரு பேரழிவாக மாற்றமடைந்துவிடும். இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அரசியல் விவகாரங்களை ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, போரில் அகப்பட்டுள்ள அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உயிர்களை பாதுகாக்க தருணம் இப்போது வந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியே வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.
பொதுமக்களை அவர்கள் பலவந்தமாககப் படைக்குத் திரட்டிக்கொள்வதும், பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவ்வாறான செயல்கள், அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒதுக்கப்படுவதற்கே வழிசெய்யும். இந்த மனிதாபிமானப் பிரச்சனையை தவிர்ப்பதற்காக சிறிலங்க அரசாங்கமும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். முதலாவதாக, ஆயிரக்கணக்கான மக்களின் மரணங்களுக்கு காரணமாகவுள்ள எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
எறிகணைத் தாக்குதலால் பல மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளன. அதேவேளையில் சிக்கலுக்கு உரிய பிரதேசத்தில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தமது உறுதிமொழியை சிறிலங்க அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக, போர் நடைபெறும் பகுதிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானக் குழு செல்வதற்கும், அங்குள்ள மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் சிறிலங்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.
மூன்றாவதாக, இடம்பெயர்ந்துள்ள சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் மக்களை பார்வையிடுவதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் ஐ.நா.வையும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும் சிறிலங்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
அதேவேளையில் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு அங்குள்ள மக்களுக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது. இதில் தாமதம் கூடாது என நான் நினைக்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் மேலும் மனிதாபிமானப் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
இதற்கு மேலாக அந்நாட்டில் உள்ள அனைத்து மக்களின் கெளரவத்தைப் பாதுகாக்கக் கூடிய வகையிலான இறுதித் தீர்வு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் மரணங்கள் இடம்பெறுவது அந்த நாட்டு மக்கள் விரும்பும் சமாதானத்தை அடைவதற்குத் தடையாகவே இருக்கும் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என்றார் ஒபாமா.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|