|
| 'நான் கடவுள்' - விமர்சனம் |
இயக்குனர் பாலாவின் 4-வது படம் 'நான் கடவுள்'. யாரும் தொட்டிராத களம், கற்பனை செய்யாத கதாபாத்திரங்கள் என பாலாவின் அடையாளம் இதிலும் உண்டு.
நித்தம் குவியும் பிணங்கள், சிதை நெருப்பில் தவம் இருக்கும் அஹோரி சாதுக்கள், பொங்கி பிரவாகித்துவரும் கங்கை என பலரும் கண்டிராத வடபுலத்து காசி மாநகரம். ஊனமுற்றவர்கள், ஊனமாக்கப்பட்டவர்கள், மூளை வளர்ச்சி, உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகள், சிறுவர்கள், அனாதையாக்கப்பட்ட பெரியவர்கள் என பிச்சையெடுத்துப் பிழைக்க நிர்ப்பந்திக்கப்பட்ட தென் புலத்து விளிம்பு நிலை மனிதர்கள். இந்த இரு உலகங்களை இணைக்கும் ருத்ரனின் நூலிழை கதை.
ஈன்ற மகவால் குலத்துக்கு இழப்பு என ஜோதிடர்கள் கூறியதை நம்பி மகன் ருத்ரனை சிறுவயதிலேயே காசியில் கொண்டுவந்து விடுகிறார் அப்பா நமச்சிவாயம். 14 வருட இடைவெளிக்குப் பின் குற்றவுணர்வு துரத்த மகனைத் தேடி காசிக்கு வருகிறார். பாவம் கரைக்க வரும் மக்கள் கடலில் எரியும் சிதைக்கு நடுவே தவக்கோலத்தில் மகனை கண்டுபிடிக்கிறார்.
ருத்ரன் இப்போது சுற்றம் துறந்த அஹோரி சாது. ஊருக்கு வர மறுப்பவனை, 'அஹோரிக்கு உறவு கிடையாது, அதை அறுத்துவிட்டு வந்து சேர்' என உபதேசம் சொல்லி ஊருக்கு அனுப்பி வைக்கிறார் ருத்ரனின் குரு.
காசியிலிருந்து கதை தென்தமிழ் நாட்டுக்கு வருகிறது. உடல் ஊனமுற்றவர்களையும், மூளை வளர்ச்சி குறைந்தவர்களையும், அனாதைகளையும் பிச்சைக்காரர்களாக்கி தொழில் செய்து வருகிறான் தாண்டவன். அவனிடம் சிக்கிக் கொள்கிறாள் பாட்டுப் பாடி பிழைப்பு நடத்தும் கண் தெரியாத ஹம்சவல்லி.
குரூபியான ஒருவனுக்கு அவளை விற்க தாண்டவன் முயல்கிறான். உடனிருப்பவர்கள் அவளை காப்பாற்றுகிறார்கள். அவள் வந்து சேரும் இடம் ருத்ரன் இருக்கும் மலைக்கோயில. அதன் பிறகு நடப்பது அதர்மத்தின் மீது அஹோரி ஆடும் ருத்ர தாண்டவம்.
கங்கைக்கு இணையாக பொங்கி வருகிறது இளையராஜாவின் ஓம் சிவயோகம். சில இடங்களில் ஓடையின் சலசலப்பு, சில இடங்களில் அருவியின் பேரோலம், பல இடங்களில் ஆழ் நதியின் அமைதி. சப்த ஸ்வரங்களில் சதிராடியிருக்கிறார் இசைஞானி. ருத்ரனின் உக்கிரத்தில் பாதி இசையின் கொடை.
ருத்ரனாக ஆர்யா. தலைகீழாக நின்று தவம் செய்யும் முதல் காட்சியிலேயே மனதில் சம்மணம் போட்டு உட்கார்கிறது தோற்றம். பேச்சு குறைவு, உக்கிரம் அதிகம்.
இதுவரை தமிழ் சினிமா கண்டிராத பிச்சைக்காரர்களின் உலகம் ஜெயமோகனின் ஏழாவது உலகம் நாவலிலிருந்து எடுத்தது. அங்ககீனர்களும், மூளை வளர்ச்சி குறைந்தவர்களும் நிறைந்த அந்த உலகம் சமூகத்தின் குப்பைத் தொட்டி. இதுதாண்டா சமூகத்தின் நிஜமுகம் என காட்டியிருக்கிறார் பாலா.
ஹம்சவல்லியாக கண் தெரியாத வேடத்தில் பூஜா. முற்றிலும் புதிய வேடம். உடல்மொழியில் அவ்வப்போது தென்படும் செயற்கையின் நிழலை தவிர்த்தால், அற்புதமான நடிப்பு.படத்தின் இறுதியில் கோரமான முகத்துடன் அவரை பேசவிட்டிருப்பது இம்சை, அவருக்கும் நமக்கும். முடிவு சர்ச்சைக்குரிய கருணை கொலை.
காசியை தனது கேமராவுக்குள் சுருட்டியிருக்கிறார், ஆர்தர் வில்சன்.சண்டைக் காட்சிகளில் கேமராவும், படத் தொகுப்பும் கைகோர்த்திருக்கிறது.
படத்தின் ஒவ்வொரு வசனத்திலும் கந்தக நெடி. சில மத்தாப்பாக சொரிகிறது. சில பட்டாசாக வெடிக்கிறது. சமூகத்தின் மீதான நையாண்டியும் நகைச்சுவையுடனே வந்து விழுகிறது.
நிறையைப் போல நெருடல்களும் உண்டு. பிச்சைக்காரர்கள் மீதான வன்முறை ஒரு கட்டத்துக்குமேல் எதையும் உணர்த்தாத வெற்று காட்சிகளாகி விடுகிறது. ஹம்சவல்லி ருத்ரனை சந்தித்த பிறகு வரும் காட்சிகள் நந்தா, பிதாமகன் படங்களின் பழி வாங்கும் காட்சிகளை ஒத்திருக்கிறது.
சாமியார்களை கும்பிடுகிற, பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்கிற பெரும்பான்மையான - அப்பர், மிடில் மற்றும் லோயர் கிளாஸ் - மக்கள் படத்தில் சுத்தமாக இல்லை. ஐரனி என்னவென்றால் இந்தப் படத்தை பார்க்கிற, அதன் வெற்றியை தீர்மானிக்கிற பெரும்பான்மை கூட்டம் அது.
தாங்கள் இல்லாத படத்தைப் பார்த்து பிடிக்கவில்லை என்று அவர்கள் கூறலாம். அல்லது, நமக்கு தெரியாத இப்படியொரு உலகமா என ஆச்சரியமும் படலாம். எதுவாக இருப்பினும் இந்த இரு விமர்சனங்களுக்கும் வெளியே இருக்கிறது, 'நான் கடவுள்'.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - விண்வெளியில் ரஷ்யாவின் செயலிழந்த செயற்கைக்கோள் மீது அமெரிக்காவின் தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோள் மோதி விபத்துக்குள்ளானது... |
| |
|
|
|
|
 | | | 'நான் கடவுள்' - விமர்சனம் | | இயக்குனர் பாலாவின் 4-வது படம் 'நான் கடவுள்'. யாரும் தொட்டிராத களம், கற்பனை செய்யாத கதாபாத்திரங்கள் என பாலாவின் அடையாளம் இதிலும் உண்டு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - ஆலிவ் எண்ணெய் மார்பகப் புற்றுநோயை தடுக்கும் அருமருந்து என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பு மற்றும் கிரனடா பல்கலைக்கழகம்... |
| |
|
|
|
|
|
|