|
| கோலாலம்பூர் விமான நிலையத்தால் மலேசியாவுக்கு பெருமை | |
2006-ம் ஆண்டில் சிறந்த விமான நிலையத்துக்கான விருதை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் பெற்றுள்ளதால், தங்கள் நாட்டுக்கு கிடைத்த பெருமையை எண்ணி மலேசிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மலேசியாவை அடுத்து அமெரிக்காவின் சான் டியாகோ விமான நிலையம் இரண்டாம் இடத்தையும்,சுவிட்ஸர்லாந்தின் சூரிச் விமான நிலையம் மூன்றாம் இடத்தையும் தட்டிச் சென்றன.
'ஏர்போர்ட் கவுன்சில் இன்டர்னேஷனல்'ஆண்டுதோறும் சிறந்த விமான நிலையங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.பல்வேறு பிரிவுகளில் விருதுகள் கொடுக்கப்படுகின்றன.
அதன்படி, 2006-ம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையத்துக்கான விருதுக்கு கோலாலம்பூர் விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டது.இவ்விருது,ஆண்டுக்கு ஒன்றைரை கோடியிலிருந்து இரண்டரை கோடி வரையிலான எண்ணிக்கை கொண்ட பயணிகளால் பயணம் செய்யப்படும் விமான நிலையத்துக்கான பிரிவில் மலேசியாவுக்கு வழங்கப்பட்டது.
இதற்கான விருது வழங்கும் விழா ஒன்றும் துபாயில் ஏற்பாடு செய்யப்பட்டு,மார்ச் 12-ம் தேதியன்று சிறப்பாக நடந்தது. அவ்விழாவை துபாய் சர்வதேச விமான நிலையம் அமைத்து கொடுத்தது.
அந்த விழாவில் கலந்துகொண்ட மலேசிய உயர் அதிகாரி பஷீர் அகமது செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட போது, இந்த விருதை தங்கள் நாட்டின் விமான நிலையத்துக்கு கிடைத்த உயரிய கெளரவமாக கருதுவதாக சிலாகித்தார்.
அவர் அவ்வாறு மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த விருதினை வழங்கும் 'ஏர்போர்ட் கவுன்சில் இன்டர்நேஷனல்', உலக நாடுகளிலுள்ள விமான நிலைய சேவைகளையும், அதன் உள்கட்டமைப்புகளையும் சீரிய முறையில் ஆய்வு செய்த பிறகே இவ்விருதை அறிவிக்கிறது.
இதனால், இவ்விருது உயரிய மதிப்பாக கருதப்படுகிறது.இத்தகைய சிறப்பு மிக்க விருதால் மலேசியா, 'கோலா(க)லம்பூர் மகிழ்ச்சியை பெற்றுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|