|
| இலவச ரிங்டோன் : மோசடியில் தனியார் மொபைல் நிறுவனங்கள் | |
இன்றைய நவீன மற்றும் அவசர உலகில் மொபைல் போனின் அவசியத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மொபைல் போன் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
மொபைல் போன் பயன்படுத்தும் உங்களுக்கு அடிக்கடி இலவசம் இலவசம் என மெசேஜ்கள் வருகின்றனவா? அதுவும் குறிப்பாக புதிய பட பாடல்களுக்கான ரிங்டோன்கள் முற்றிலும் இலவசம், பிறந்த நாள போன்ற விசேஷ நாட்களுக்கான பட மெசேஜ்கள் என்று வருகின்றனவா? அப்படியானால் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய பகுதி இது.
தனியார் மொபைல் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ரிங்டோன் வழங்குவதாக முதலில் ஒரு மெசேஜ் அனுப்பி விடுகின்றனர். ஆர்வப்பட்டு யாராவது அந்த மெசேஜ்க்கு பதில் அனுப்பி ரிங்டோன் பதிவிறக்கம் செய்ய முயற்சித்தால் அந்த வாடிக்கையாளரிடம் நிமிடத்திற்கு ரூபாய் 25 வரை மறைமுகமாக கறந்து விடுகின்றனர்.
விசாரித்தால், ரிங்டோன் மட்டும்தான் இலவசமாம், பதிவிறக்கத்திற்கு கட்டணமாம்.
ஆனால், இதற்காக அந்த நிறுவனங்கள் எவ்வளவு செலவு செய்கிறது தெரியுமா? ஒரு செலவும் இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.
ஆம்! தனியார் மொபைல் நிறுவனங்கள்,தனியார் இணைய தளங்களில் இருந்து ரிங் டோன்களையும், பட மெசேஜ்களை திருடி, அவர்களுடைய வாடிக்கையாளர்களிடம் பணம் பண்ணுகின்றனர்.
இந்த விஷயம் குறிப்பிட்ட அந்த தனியார் இணையதளங்களுக்கு தெரிய வர விபரீதமானது.
இதையடுத்து, இதுபோன்ற குற்றங்களை கண்காணிக்கும் வர்த்தக ஆதிக்க தடுப்பு நடைமுறை ஆணையத்திற்கு புகார்கள் பறக்க, மொபைல் சேவை வழங்கும் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.
மொபலில் இலவசம் என இனி எது வந்தாலும் நீங்கள் உஷாராக இருப்பீர்கள் தானே.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|