|
| இன்னும் ஒரு வருடத்திற்கு சிமென்ட் விலை உயராது | |
சிமென்ட் விலையை இன்னும் ஒரு வருடத்திற்கு உயர்த்த மாட்டோம் என மத்திய அரசிடம் சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் சிமெண்ட் தொடர்பான கலால் வரியில் சில மாற்றம் அறிவிக்கப்பட்டது.50 கிலோ கொண்ட சிமெண்ட் மூடை ஒன்று 190 ரூபாய்க்கு விற்கப்பட்டால்,அந்த கம்பெனியின் சிமெண்ட்டுக்கான கலால் வரி டன் ஒன்றுக்கு தற்போதுள்ள 400 ரூபாய்க்கு பதில் 350 ரூபாயாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் சிமென்ட் விலையை உயர்த்தின . 50 கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது.
இதுகுறித்து சிமென்ட் தயாரிப்பாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், சிமெண்ட் விலையை உயர்த்த வேண்டாம் என தெரிவித்திருந்தார். அத்துடன், விலை குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசின் கடமை என்றும் கூறினார். ஆனால் 50 கிலோ கொண்ட மூடைகள் கொண்ட ஒரு டன் சிமென்ட்டுக்கான கலால் வரி 200 ரூபாய் வரை உயர்ந்து விட்டதால் ,தாங்கள் இந்த விலை உயர்வை அமல்படுத்தியதாக சிமென்ட் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர் .
இருப்பினும் கலால் வரி சிறிதளவு உயர்ந்துள்ள போதிலும்,சிமென்ட் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படாது என்பதால் விலையை உயர்த்தக் கூடாது என அரசு எச்சரித்திருந்தது.
இந்நிலையில்,சிமென்ட் தயாரிப்பாளர்களுடன் மத்திய வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் வெள்ளியன்று ( மார்ச் 9 )பேச்சு நடத்தினார்.இப்பேச்சுவார்த்தையின் பலனாக இன்னும் ஒரு வருடத்திற்கு சிமென்ட் விலையை உயர்த்த மாட்டோம் என கமல்நாதிடம் சிமென்ட் தயாரிப்பாளர்கள் உறுதியளித்தனர்.அதே சமயம் அண்மையில் உயர்த்திய சிறிதளவு விலை உயர்வை வாபஸ்பெற மாட்டோம் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர் .
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|